கொலம்பியாவின் அமேசன் காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி, ஒரு மாதத்தைக் கடந்த நிலையிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொலம்பியா நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் முதலாம் திகதி, 13, 9, 4 மற்றும் ஒரு வயதுக் குழந்தைகள், அவர்களது தாய் மற்றும் விமானி, துணை விமானி ஆகியோர் அமேசான் காட்டுப் பகுதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த போது, இயந்திரக்கோளாறு காரணமாக, விமானம் திடீரென விபத்துக்குள்ளாகியது.
விபத்தின்போது, குழந்தைகளின் தாய், விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, பல நாட்கள் தேடுதலின் பின்னர் குறித்த குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, பல வாரகால தேடுதலுக்குப் பிறகு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது முழு நாட்டிற்கும் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
40 நாட்களாக காணாமல் போன குறித்த குழந்தைகளை, கொலம்பியா இராணுவத்தினரும், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பராமரித்து வருகின்றனர்.
மேலும் குறித்த குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.