உலக டெஸ்ட் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இரண்டாவது பருவத்திற்கான (2023) ஐ.சி.சி (ICC) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி கடந்த புதன்கிழமை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
இரண்டாவது பருவத்திற்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் தெரிவாகியிருந்தன.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார்.
அதன்படி, முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 469 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 121 ஓட்டங்களையும் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
அடுத்து துடுப்பாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ஓட்டத்தில் சகல இலக்குகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ரஹானே 89 ஓட்டங்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பின்னர் 173 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்களை எடுத்து தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு இந்திய அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்தது.
444 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இன்று ஐந்தாவதும் இறுதியுமான நாள் நாள் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 280 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இந்தப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.