ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் தடவையாக வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படுவதன் மூலம் லங்கா பிறிமியர் லீக் கிரிக்கெட் புதிய அத்தியாயம் படைக்கவுள்ளதாக எல்.பி.எல். போட்டி பணிப்பாளர் சமன்த தொடன்வெல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், தம்புள அவ்ரா, கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், கண்டி பெல்கன்ஸ், கோல் க்ளடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் மொத்தம் 360 வீரர்களில் அதிசிறந்தவர்களை இந்த ஏலத்தில் வாங்கவுள்ளன.
இவ் ஏலத்திற்கு 156 வெளிநாட்டு வீரர்களும் 204 உள்ளூர் வீரர்களும் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 500,000 அமெரிக்க டொலர்களை செலவிடும். இது இலங்கை நாணயப்படி, சுமார் 15 கோடி ரூபாவாகும்.