இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் இறுதிக்கட்டம் வரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்கள் எடுத்து தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்சில் 386 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது.
7 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை துடுப்பாடிய இங்கிலாந்து அணி நேற்று 4-ம் நாள் போட்டியின் போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். இவர்களை தவிர பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களையும் ஒல்லி ராபின்சன் 27 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணிக்காக பெற்றிருந்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ஒட்டத்தில் சகல இலக்குகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக துடுப்பாடி அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ஓட்டத்திலும் ஸ்டீவன் ஸ்மித் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் அவஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்தது.
இறுதி நாளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற 174 ஓட்டங்களும் இங்கிலாந்து வெற்றிபெற 7 இலக்குகளும் தேவைப்பட்டன.
இந்நிலையில், போட்டியின் இறுதி நாளான நேற்று (20) காலை பெய்த மழை காரணமாக முதலாவது ஆட்ட நேர பகுதி கைவிடப்பட்டது.
பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் அவுஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா சற்று பலம்வாய்ந்த நிலையில் இருந்தது. கவாஜா 56 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக அவுஸ்திரேலியா இலகுவான வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அவர்கள் இருவரும் 6 ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கெமரன் க்றீன் ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த உஸ்மான் கவாஜா அணியின் ஓட்ட எண்ணிக்கை 209 ஆக இருந்த போது பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
எட்டாவதாக அலெக்ஸ் கேரி ஆட்டம் இழந்தபோது அவுஸ்திரேலியா 227 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
இந் நிலையில் பெட் கமின்ஸ், நெதன் லயன் ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான 2 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.