இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 5 வேட்பாளர்களை மாத்திரமே களமிறக்கியுள்ளது. ஆகவே போலி வேட்பாளர்களின் பிரசாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா- கொத்மலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் மருதபாண்டி ராமேஷ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது எனக்கூறி சிலர் மக்களிடம் வாக்கு கேட்கின்றனர்.
ஆனால் உண்மையாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிக்கும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அத்துடன் கட்சியைவிட்டு வெளியேறியவர்களை இணைத்துக்கொள்ளும் எண்ணமும் தற்போது இல்லை.
மேலும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நான் உட்பட ஐந்து வேட்பாளர்களே காங்கிரஸின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
குறித்த ஐவரை, மக்கள் வெற்றி பெறவைப்பதுடன், போலி பிரசாரம் முன்னெடுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறந்த பதிலை அவர்கள் வழங்குவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.