வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்க எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபாய் செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது.
இந்த நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆளுநர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையி,
சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளது.
காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் மோசமான வீதியூடாகவே மக்கள் பயணித்து வந்தனர்.
இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வருகை பலமடங்கு அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
