விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார் – உயிலங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர்களை 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் நேற்று மலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார்- மதவாச்சி பிரதான வீதியில் மதுபானசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று முன் தினம் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து உயிலங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கலவரத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் அடையாளம் காட்டியதை அடுத்து அவர்களை விசாரணை செய்ய முற்பட்ட போதே அவ்விடத்தில் நின்ற சிலர் பொலிசாரை தாக்கியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிசார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து , குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று மாலை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதுடன் குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.