யாழ்ப்பாணம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள வெற்றுக்காணியின் வாசலில் சூனிய பொம்மை ஒன்றும் இயந்திர தகடும் வைத்து அச்சுறுத்தும் வகையிலான வாசகம் எழுதப்பட்ட பதாதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையால் அப்பகுதியூடாக செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் காணி அமைந்துள்ள வீதியோரமாக மக்கள் குப்பைகளை வீசி செல்வதால் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக தனது காணிக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக எழுதி காணியின் முன்னால் காட்சிப்படுத்தியுள்ளார்.
அவ்வாறு எழுதப்பட்ட பதாதையுடன், பொம்மை ஒன்றையும், இயந்திர தகடு ஒன்றினையும் கட்டித் தொங்கவிட்டுள்ளார்.
அவ்வாறு குப்பை கொட்டுபவர்களுக்கு வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். ஆகவே தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம் என எழுதிக் காட்சிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக பதாதை காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியில் யாரும் தற்போது குப்பைகளை கொட்டுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.