ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுவது கூட நேர்மையானதாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகளை வங்குரோத்து அடைய செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மூன்று நாட்களுக்கு மேல் வங்கிகளுக்கு விடுமுறை வழங்குவதால், சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.
சாதாரணமாக மூன்று நாட்களுக்கு மேல் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. எனினும் அரசாங்கம் இந்த சம்பிரதாயத்தை மீறியுள்ளது.
வங்கி விடுமுறை தினம் அல்லாத 30 ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஏன் இவ்வாறு வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது வங்கியின் பிரதானிகளுக்கும் தெரியாது.
தேசிய கடனை மறுசீரமைப்பது தொடர்பாக வங்கிகளின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
பொருளாதாரத்தை வங்குரோத்து அடைய செய்த அரசாங்கம் அதற்கு பதிலை தேடுவதற்கு பதிலாக மக்களுக்கு அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் உருவாக்கி, வங்கி கட்டமைப்பை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் வங்கிகள் இயங்கி வருகின்றன. வைப்பு செய்துள்ளவர்கள், கடனை பெற்றவர்கள் என வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவர்களுடன் ஏற்படுத்த வேண்டிய நம்பிக்கைக்கு பதிலாக சந்தேகத்தை உருவாக்கினால், மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதை தவிர்க்க முடியாது.
வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள 5 நாட்களுக்குள் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர்.
வரவு செலவுத்திட்ட விவாதங்களின் போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படுவதில்லை.
நாடாளுமன்றத்தை கூட்டி கடனை இரத்துச் செய்யும் யோசனையை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதி பிரான்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு வந்துள்ளார் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.