யாழ். இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 12 ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று(30) ஆரம்பமாகியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்து கல்லூரி அணி தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.
அதன்படி, யாழ். இந்து கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ 1981இல் ஆரம்பமாகி 1982 இலும் நடத்தப்பட்டது.
ஆனால், 1983இல் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அது தடைப்பட்டது. 12 வருடங்களில் பின்னர் 2005இல் 40 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு ‘இந்துக்களின் பெருஞ்சமரு’க்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மீண்டும் இந்துக்களின் சமர் கைவிடப்பட்டு 2013 இல் கொழும்பில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2019 வரை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மாறிமாறி நடத்தப்பட்டது.
2019 இல் பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் கடைசியாக இந்துக்களின் பெருஞ்சமர் நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி, போராட்டம் ஆகியன காரணமாக மீண்டும் தடைப்பட்ட இப் போட்டி கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வருடம் இந்துக்களின் பெருஞ்சமர் கொழும்பில் நடைபெறுகின்றது.
இந்த வருடம் கொழும்பு இந்து கல்லூரி அணிக்கு ராஜ்குமார் டில்ருக்ஷனும் யாழ். இந்து கல்லூரிக்கு எல். பிரியந்தனும் தலைவர்களாக விளையாடுகின்றனர்.