கொழும்பு இந்து கல்லூரிக்கும் யாழ். இந்து கல்லூரிக்கும் இடையிலான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி மகுடம் சூடியுள்ளது.
கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (30)ஆரம்பமான இந்த இரண்டு நாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு இந்து கல்லூரி அணி தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அணி 60 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
யாழ். இந்து அணி சார்பில் ப்ரஷ்ஷித் 80 ஓட்டங்களையும் கஜன் 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் டிஷேகர் 4 இலக்குகளையும் அபிஷேக் 3 இலக்குகளையும் கொழும்பு இந்து அணிக்காக வீழ்த்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்து 49 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
டிலோஜன் கொழும்பு இந்து அணிக்காக 17 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் யாழ் இந்து அணியின் கஜானாத் 5 இலக்குகளையும் தரனிசன் 3 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்.
தமது முதல் இன்னிங்ஸில் கொழும்பு இந்து அணி குறைவான ஓட்டங்களை பெற்றதன் காரணமாக ஃபோலோவோன் முறையில்(Follow on) இராண்டாம் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாட யாழ் இந்து அணியால் பணிக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி, தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்து அணி 80.1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்று யாழ் இந்து அணிக்கு 37 ஓட்டங்களை வெற்றி இலக்காக வழங்கியிருந்தனர்.
கொழும்பு இந்து அணி சார்பில் அதன் தலைவர் டிலுக்ஸன் 72 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் யாழ் இந்து அணிக்காக கஜானாத் 6 இலக்குகளையும் தரனிசன் 4 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.
அதன்படி, 37 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து அணி 12.1 ஓவர்களில் 1 இலக்கை மாத்திரம் இழந்து 38 ஓட்டங்களை பெற்று 12 ஆவது இந்துக்களின் சமரை தாமதாக்கினர்.