ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹட்டன் உள்ளிட்டபல பிரதேசங்களிலும் வசிக்கும் பிரதேச வாசிகளின் தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் வில்பிரட்புர பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், வங்கி அட்டைகள் ஆகியவற்றை பிணையாக பெற்றுக்கொண்டு அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என்பது முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
மேலும், பணம் பெற்றுக்கொண்டவர்களின் பெருவிரல் அடையாளம் வைக்கப்பட்டுள்ள வெற்றுக்கடதாசிகள் சிலவற்றையும் , கையொப்பம் இடப்பட்டுள்ள கடதாசிகள் உள்ளிட்ட ஆவணங்கள் சிலவற்றையும் தம்வசம் வைத்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தேசிய அடையாள அட்டைகள் காணாமல் போவது தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஹட்டன் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணைகளின்போது குறித்த நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியவேளையில் அங்கிருந்து ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.