தெற்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், குரோஷியா மற்றும் துருக்கியின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸினை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில், வெப்பநிலை 48.8 பாகை செல்சியஸ் வரை உயரலாம் எனவும் புளோரன்ஸ், ரோம் உள்ளிட்ட 10 நகரங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இத்தாலியைச் சேர்ந்த 44 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அதிக வெப்பம் காரணமாக மயக்கமுற்று விழுந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னதாக இறந்தார் என இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, “நாங்கள் தாங்க முடியாத வெப்பத்தை எதிர்கொள்கிறோம்” என்று இத்தாலிய அரசியல்வாதி நிக்கோலா ஃப்ராடோயானி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரோமில் உள்ள கொலோசியத்திற்கு வெளியே ஒரு பிரித்தானிய நபர் உட்பட நாட்டில் பல சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே அதிகரித்த வெப்பம் காரணமாக மயக்கமுற்றுள்ளனர்.
மேலும், உலகளாவிய ரீதியில் கடந்த ஜூன் மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக நடுத்தர வரம்பு வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.