நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்க் கட்டண திருத்தத்துக்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
எனினும் குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்காத நிலையில் , அதற்கான பரீசிலனையும் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்க் கட்டணத் திருத்தத்தைத் தயாரிக்கும் போது நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கடனைச் செலுத்துதல் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையின் செயற்பாட்டுச் செலவை ஈடுசெய்தல் போன்ற முறைகளை கருத்தில் கொண்டே குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இத் திருத்தத்தில் சமுர்த்தி பயனாளர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கட்டணங்கள் எதுவும் உள்வாங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறைந்தளவில் நீரை பாவனைச் செய்யும் நுகர்வோருக்கு ஒரு அலகின் கட்டணத்தில் 20 சதவீதத்தை மானியமாக வழங்கவும் குறித்த திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட குறித்த அமைச்சரவை பத்திரத்தில் நீர் கட்டண கொள்கையுடன் நீர் கட்டண சூத்திரம் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் கோரப்பட்டுள்ளது.