உண்மையைக் கண்டறியும் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் – அலி சப்ரி

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீதான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேவையான ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குவதில் அரசாங்கத்தின் பங்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விளக்கமளித்த சப்ரி, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததோடு, அத்தகைய பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் உறுதியளித்தார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மீது நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் மேலும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, மூன்று தசாப்த கால யுத்தம் நாடு முழுவதிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியமானதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னைய ஆணைக்குழுக்களின் முன்மொழிவுகள் போதியளவு அமுல்படுத்தப்படாததால், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் மாதிரிகள் இலங்கைக்கு பொருத்தமான பொறிமுறையைப் பரிசீலிக்க வழிவகுத்தது என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு மேலும் சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுப்பதற்கு ஆணைக்குழுவைப் பற்றி சமூகத்திற்குத் தெரியப்படுத்துவதும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவைப் பெறுவதும் இன்றியமையாதது என்று ரத்னப்பிரிய மேலும் வலியுறுத்தினார்.

மேலும் நிகழ்வில் உரையாற்றிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச, சுதந்திரம் பெற்று இரண்டு தசாப்தங்களின் பின்னர் நல்லிணக்கத்தின் மூலம் வளர்ந்த நாடாக சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது குறித்து கவனத்தை ஈர்த்தார்.

இலங்கையின் சொந்த வளர்ச்சிக்கு நல்லிணக்கம் இன்றியமையாத காரணியாக இருப்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இதன்படி, இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதற்கும் உள்நாட்டில் பயனுள்ள மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறிமுறைக்கு பங்களிக்கும் முயற்சியில், தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன், சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு, மக்கள் தொடர்புப் பிரிவு என மூன்று பிரிவுகளைக் கொண்ட இடைக்காலச் செயலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply