ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சுரங்கப்பாதை பெருவெள்ளம் தொடர்பாக தென் கொரியாவில் உள்ள 36 உள்ளூர் அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
குறித்த சுரங்கப்பாதையில் சிக்கி 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட விசாரணையில், பெருவெள்ளத்திற்கு முன்னதாக பல எச்சரிக்கைகளை அதிகாரிகள் புறக்கணித்ததைக் கண்டறிந்தனர்.
ஜூலை 15ம் திகதி, தென் கொரியாவில் பல பகுதிகளில் பெருமழையும், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நாடு முழுவதும் ஏற்பட்ட பேரழிவில் குறைந்தது 40 பேர் மரணமடைந்துள்ளனர்.
பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள அந்த சுரங்கப்பாதை Cheongju நகரில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வார இறுதியில் பெய்த மழையின் காரணமாக அருகில் உள்ள ஆற்றங்கரையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் பேருந்து ஒன்றுடன் மொத்தம் 15 வாகனங்கள் அந்த சூரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது. வெறும் 9 பேர்கள் மட்டும் மீட்கப்பட்டனர். மட்டுமின்றி, அந்த சுரங்கப்பாதையில் இருந்து வாகனங்களை மீட்க உள்ளூர் அதிகாரிகள் தரப்பு பல நாட்கள் போராடும் நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் விசாரணையை தொடங்கிய பொலிசார், சுரங்கப்பாதை விபத்தை தவிர்த்திருக்கலாம் என்பதைக் கண்டறிந்தனர். சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என சம்பவத்தன்று மூன்று முறை அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கட்டுமான மேற்பார்வையாளர் ஒருவர் சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் குறித்து அதிகாரிகளுக்கு ஏழு முறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் உள்ளூர் அதிகாரிகள் இந்த எச்சரிக்கைகளை கருத்தில்கொள்ளவில்லை என்றே தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சுரங்கப்பாதை பேரழிவுக்கு காரணமானவர்களை பதவி நீக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.