சுவிஸ் ஆல்ப்ஸ் மலையிலுள்ள பனிப்பாறை ஒன்று உருகிய நிலையில், அங்கு 37 ஆண்டுகளுக்குமுன் மாயமான மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட் பகுதிக்கு மேலுள்ள ஆல்ப்ஸ் பகுதியில் மலையேற்ற வீரர்கள் சிலர் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, பூட்ஸ் ஒன்றும், மலையேற்றத்துக்கு உதவும் சில கருவிகளும் அவர்கள் கண்ணில் பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அங்கு மேற்கொண்ட சோதனையில் உயிரிழந்த ஒருவருடைய உடல் ஒன்று அங்கு புதைந்திருப்பது தெரியவந்தது.
பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரித்ததால், பனிப்பாறை ஒன்று உருகியதைத் தொடர்ந்து புதையுண்டிருந்த அந்த நபரின் உடல் வெளியே தெரிந்துள்ளது.
அந்த உடலை DNA பரிசோதனைக்குட்படுத்தியபோது, அது 1986ஆம் ஆண்டு மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான ஜேர்மன் நாட்டவர் ஒருவருடைய உடல் என்பது தெரியவந்துள்ளது.
அப்போது 38 வயதுடையவராக இருந்த அந்த மலையேற்ற வீரருடைய உடல் 37 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் முதலான விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.