ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற பிரதான பாடங்களுக்கு இந்த ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் மாகாணங்களினால் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அண்மையில் பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் ஊடாக தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது, அனைத்து தேசிய கல்வி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, எதிர்காலத்தில் ஒரே பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முன்மொழிவும் கருத்துருவின் வடிவில் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.