நீர் கட்டணங்கள் இன்று முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.
ஒரு அலகுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவதுடன், மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் பொது குடிநீர் குழாய்கள், தோட்டத்து தண்ணீர் குழாய்கள், அரச பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் முதல் திகதி நீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.
நீர்க்கட்டணங்கள் சுமார் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கட்டண திருத்தத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பாதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.