பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சில் நடைபெற்றுள்ளது.
சேவ் த சில்றன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, பிரத்யேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் ஊடாக முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதுடன் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் , பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்பக்கல்வி மேம்பாடு, போஷாக்கு மட்ட அதிகரிப்பு, மற்றும் சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.