இலங்கையின் வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இது தொடர்பில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
பல வருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்டத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளேன். தற்போது எனக்கு 45 வயதாகிறது. நான் இருக்கும் வரை ஆசியாவில் எந்த ஒரு பெண் வீரரும் வலைப்பந்தாட்டத்தில் ஈடுபடவில்லை. இப்போது இலங்கை வலைப்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்றார்.
சர்வதேச வலைப்பந்தாட்ட அரங்கில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான தர்ஜினி சிவலிங்கம், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
நாளை இலங்கைக்கு வலைப்பந்தாட்ட அணி வந்தாலும், அவர்களுடன் மீண்டும் இலங்கைக்கு வரமாட்டேன். சர்வதேச வலைப்பந்தாட்டத்திலிருந்து விடைபெற்றாலும், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் கிளப் வலைப்பந்தாட்டத்தில் நிச்சயம் பங்கேற்பேன். இதை என்னால் மறக்க முடியாது.
நான் உலகப் புகழ்பெற்ற வலைப்பந்து வீராங்கனையாக இருப்பதற்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தர்ஜினி சிவலிங்கம் கடந்த 2009, 2012, 2014, 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐந்து ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப், 2011, 2015, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கோப்பைகள் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார், மேலும் அவர் ஒருமுறை ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கினார்.
உலகக் கோப்பைக்கு முன் போட்ஸ்வானாவில் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளின் போது மட்டுமே இலங்கை அணியுடன் பயிற்சி பெற முடிந்தது. மேலும், நான் பங்கேற்ற இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் எனது திறமையை வெளிப்படுத்தினேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தர்ஜினி சிவலிங்கம் 2011 வலைப்பந்து உலகக் கோப்பையில் உலகின் சிறந்த கோல் சூட்டருக்கான விருதையும், 2009 மற்றும் 2012 இல் ஆசியாவின் சிறந்த கோல் சூட்டருக்கான விருதையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.