அமேசான் காட்டுப்பகுதியைப் பகிர்ந்து கொள்ளும் எட்டு நாடுகள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை எட்டவில்லை.
குறித்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரேசிலின் பெலெம் நகரத்தில் நேற்று இரண்டு நாள் உச்சிமாநாட்டில் சந்திந்துள்ளனர். இது 14 ஆண்டுகளில் முதல் முறையாக ஒன்று கூடியுள்ளது.
கூட்டு பிரகடனத்தின் மூலம் காடழிப்பை எதிர்த்து ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த பாதுகாப்பு இலக்குகளை தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானைப் பாதுகாப்பது காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முயற்சிகளின் மையப் பகுதியாகும்.
உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா 2030 ஆம் ஆண்டளவில் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பொதுவான இலக்குக்கு அழைப்பு விடுத்தார். இது பிரேசில் அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட கொள்கையாகும்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசானின் 60 சதவீதம் பிரேசிலில் உள்ளது. பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அமேசானின் மீதப் பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.
நேற்று பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தனது தொடக்க உரையில், காலநிலை நெருக்கடியின் கடுமையான பாதிப்பு குறித்தும் சகாப்தத்தின் சவால்கள் தொடர்பிலும் அவற்றிலிருந்து மீண்டெழும் வாய்ப்புகள் குறித்தும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காடழிப்பு நடவடிக்கைகளால் உலகம் முழுவதிலுமுள்ள அனேக நாடுகளில் தற்போது அதிகரித்த வெப்பநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான காடழிப்பு நடவடிக்கைகள் மேலும் மேலும் தொடர்ந்தால் இன்னமும் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்லும்.