மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேஷியா அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர், தாம் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேஷியா 2023 அழகுராணி போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு முன்னர், நடைபெற்ற உடல் சோதனையின்போது போட்டியாளர்கள் தமது மேலாடையை அகற்றுமாறு கோரப்பட்டனர் என அவர்களின் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என ஜகார்த்தா நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டதை சட்டத்தரணி மெலிசா ஆங்ராயினி உறுதிப்படுத்தியுள்ளார். 3 போட்டியாளர்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதேவேளை மேலும் பல முறைப்பாட்டாளர்கள் முன்வரக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேஷியா அமைப்பும், உலகளாவிய மிஸ் யூனிவர்ஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன.