இந்தியாவில் நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
9 லீக் போட்டிக்கான திகதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், டெல்லியில் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இலங்கை- பாகிஸ்தான் மோதும் போட்டி ஒக்டோபர் 12 ஆம் திகதியில் இருந்து 10 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
லக்னோவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா – அவுஸ்திரேலியா போட்டி ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு பதில் 12 ஆம் திகதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் சென்னையில் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பங்காளதேஷ்-நியூசிலாந்து போட்டி ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறும்.
லீக் சுற்றின் கடைசியில் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி காலை 10:30 மணிக்கு அவுஸ்திரேலியா – பங்காளதேஷ் அணி புனேவில் மோதுகிறது.
பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் விளையாடுகின்றன. நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டி 11 ஆம் திகதியில் இருந்து 12 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
தொடக்க போட்டி மற்றும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.