அடுத்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் சி.ரி ஸ்கான், எம்.ஆர்.ஐ, பி.ஈ.டி ஸ்கான் போன்ற சோதனைச் சேவைகள் அபாய கட்டத்தில் உள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது நிலவும் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்களின் பற்றாக்குறையால் இந்த சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் புதிய அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அடுத்த சில மாதங்களில், சி.ரி ஸ்கானிங், எம்.ஆர்.ஐ ஸ்கானிங்,பி.ஈ.டி ஸ்கானிங் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளில் கதிரியக்கச் சேவைகள், அரசு மருத்துவமனை அமைப்பில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவுகளில் ஸ்கானிங் அலகுகள் வீழ்ச்சியடையக்கூடும்.
தற்போது, சுமார் 40 சதவீத பணியாளர்கள் பற்றாக்குறையுடன் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன”
மாதாந்தம் கிட்டத்தட்ட 3 – 4 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு காணப்படுகின்றது.
தற்போது எஹலியகொட வைத்தியசாலையில் கதிரியக்கச் சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. காரணம், மருத்துவமனையில் பணியாற்றிய ஒரே ஒரு கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர் சில மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்றுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து நாங்கள் பல மாதங்களாக அமைச்சகத்திடம் தெரிவித்து வருகிறோம், ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றார்.