நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், 9 லட்சம் ஏக்கர் அங்குல நீர் கொள்ளளவு மாத்திரமே பயன்பாட்டிற்கு உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் கொள்ளளவில் 30.3 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும், அதனையே பயன்படுத்த முடியும் என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 நீர்த்தேக்கங்களில், 10 சதவீதத்திற்கும் குறைவான நீர் கொள்ளளவு கொண்ட ஒன்பது நீர்த்தேக்கங்களும், 30 சதவீதத்திற்கும் குறைவான நீர் கொள்ளளவு கொண்ட 32 நீர்த்தேக்கங்களும் உள்ளன. மொத்த நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என அவர் தெரிவித்தார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொறுத்தவரையில், நீண்ட கால ஆய்வுகளின் படி, தற்போதைய நீர்மட்டம் இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நிலவும் வெப்பமான காலநிலை மிகவும் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக, நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாதல் மிக அதிகமாக உள்ளது. அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, அக்டோபர் மாதத்திற்குள் மழையால் நீர்த்தேக்கங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.