எதிர்வரும் 15.08.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கீரிமலையில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை உற்சவத்தினை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரம் பொது மக்கள் வருகை தரக் கூடும், என எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்களின் நன்மை கருதி அவர்களிற்கு தேவையான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 5 மணிக்கு மாவை கந்தன், மாவை கந்தன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கு கீரிமலை புனித தீர்த்த பிரதேசத்திற்கு சென்றடைவார். அன்றைய தினம் தமது பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்குரிய சகல வசதிகளும் பொதுமக்களின் நன்மை கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிதிர் கடமைகளில் ஈடுபடவுள்ள மதகுருமார்கள் அனைவரும் தமது பதிவினை உறுதிப்படுத்திக்கொள்வதுடன் சமய சமூக ஒழுக்கத்தினை முறையாக பின்பற்றுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
கீரிமலை புனித பிரதேசத்தை சுற்றியுள்ள பிரதான வீதிகளில் அன்றைய தினம் வீதி தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள்.
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மட்டும் வீதித் தடைகளை கடந்து சென்று பொதுமக்களினை ஏற்றுவதற்கும் இறங்குவதற்கும் அனுமதிக்கப்படும். ஏனைய அனைத்து வாகனங்களும் வாகன தரிப்பிடங்களில் நிறுத்த வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் தனித்தனியாக வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கீரிமலை புனித தீர்த்தக் கரைக்கு தமது பிதிர் கடன்களை நிறைவேற்ற வரும் பொதுமக்கள் அனைவரும் கலாச்சார உடை அணிந்து வருவதுடன், பாதணிகளுடன் வருகை தருவதினை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அதிக வெப்பமான காலநிலை நிலவும் தற்கால சூழலில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், முதலுதவி மற்றும் தேவையான மருத்துவ சேவை வழங்குவதற்கும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கீரிமலை புனித பிரதேசத்தினை சுற்றியுள்ள எந்த ஒரு பிரதேசத்திலும் போதை சார்ந்த எந்தவொரு பொருளினை விற்பனை செய்வதற்கும், அதனை பயன்படுத்துவதற்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களை வியாபாரம் மற்றும் யாசக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பொது அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் எந்தவொரு சம்பவங்களுக்கும் அனுமதி கிடையாது என்பதுடன், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.