அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பல பகுதிகளில் கணிசமான அளவில் அதிகரித்து வருவதால், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது பொலிஸ் அதிகாரிகளுக்கு கடினமான பணியாக மாறியுள்ளது.
மேலும், சமீபகாலமாக கொள்ளை, கார் திருட்டு, குடும்ப வன்முறை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, இவ்வாறான குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் ‘சவிய’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், இலங்கையின் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினையை எவ்வாறு கையாள்வது? என்பது குறித்த, பொலிஸ் அதிகாரிகளுக்கான ‘சவிய’ விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு, களனி, நுகேகொட மற்றும் கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இதுவரையில் இந்த வேலைத்திட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நீர்கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுகளுக்கு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் முதல் வாரத்தில் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.