
ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ராஜபக்ஷ சகோதரர்கள் பதவி வகிக்கும் அரசாங்கம் பௌத்த பாரம்பரியங்களை பாதுகாக்கும் என மக்கள் வைத்த நம்பிக்கை சிதைத்துவிட்டதாக சிங்கள பௌத்த அமைப்பான ஹெல பொது சவிய கவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதாக உறுதியளித்து பிரசாரம் செய்த ஜனாதிபதி தற்போது அதற்கு நேர் எதிராக செயற்படுவதை மக்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நகரமான குருநாகலில் இரண்டாம் புவனேகபாகு மன்னன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஹெல பொது சவிய அமைப்பு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
நகர அபிவிருத்தி என்ற போர்வையில் குருநாகல் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய 10 கட்டடங்களில் ஒன்றான இரண்டாம் புவனேகபாகு மன்னரின் அரச சபை கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையும் தொல்பொருள் துறையும் தகர்த்துள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை வீதியை அகலப்படுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்புதலுடன் குறித்த கட்டடத்தை இடித்ததாக குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ விதான ஏற்றுக்கொண்டுள்ளார்.
எவ்வாறெனினும் தொல்பொருள் மதிப்பு மிகுந்த கட்டடங்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு பிரதமர் கலாசார அமைச்சர் என்ற வகையில் கலாசார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய இது தொடர்பில் ஆராய்வதற்கு பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவினால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னதாக இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.