மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு, இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களையும் சேகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் மருந்துக் கொள்வனவு செயல்முறை தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை எந்தவொரு தரப்பினரும் சமர்ப்பிக்க முடியும் என வலியுறுத்தியுள்ள சுகாதார அமைச்சு, இவ் ஆண்டு செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் அதனை எழுத்துமூலம் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டில் மருந்து கொள்முதல் செயல்முறையில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, வெளிப்படையான கொள்முதல் முறையை அறிமுகப்படுத்தவும், உயர்தர மருந்துகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யவும் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை மறுசீரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்கவும் அமைச்சர்கள் அமைச்சரவை ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை மூன்று மாதங்களுக்குள் கையளிக்கப்படும். இதன்படி, அறிக்கை தொகுக்கப்படுவதற்கு முன்னர் இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன்போது எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் தமது கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள நான்கு CT ஸ்கேனர்களில் இரண்டு தற்போது பழுதடைந்துள்ளதாகவும், இதனால் மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.