யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் கைகலப்பு கத்திக் குத்தில் முடிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட சிங்கள மாணவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ‘யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் மாணவர்கள் தங்கும் விடுதியில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

அதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விஞ்ஞான பீட இறுதி ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இன்றும் பரீட்சை நடைபெறுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனையடுத்து கத்தியால் குத்தினார் என்ற குற்றச்சாட்டில் மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir