தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும் – சிறிதரன் எம்.பி

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரைக் காணியை அளவீடு செய்து விகாரைக்கு வழங்குவதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுகின்ற போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல பேர் இங்கே திரண்டு இந்த அளக்கின்ற விடயத்தைத் தடுத்திருக்கின்றார்கள்.

மிக முக்கியமாக, மக்கள் இங்கு திரண்டதாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்கள் வருகை தந்ததாலும் இந்த அளவீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டதாக உணரப்படுகிறது.

இருந்தாலுங்கூட இதற்கான மாற்றீட்டுக் காணி அல்லது வேறு இடங்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் ஏமாற்று வித்தைகள்.

இதில் மிக முக்கியமாக இந்த மக்களுடைய காணி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

எந்த அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இந்த விகாரை அகற்றப்பட்டு, காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதுதான் இந்த மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது.

விகாரைக்கு என்று சொந்தமாகக் காணியிருந்தால் அதில் அவர்கள் அமைத்துக் கொள்ளலாம். அல்லது அதைப் பற்றிப் பரிசீலிக்கலாம். ஆனால், அரசாங்கத்தினுடைய  வலுக்கட்டாயமான, மக்களை ஏமாற்றுவதற்கான இந்த நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும்.

மிக முக்கியமாக, ஓர் அமைச்சர் வந்து அளவீடு செய்வதற்குத் தயார் நிலை என்பது போல, அளவீடு செய்வது போல காட்டிக் கொள்ளுகிறார். ஆனால், அதற்குப் பின்னாலே ஒரு செய்தி – இந்தக் காணிகளை அளவீடு செய்து அரசாங்கத்துக்கு எடுக்கக்கூடிய காணிகளை எடுக்கப் போகின்றார்கள் என்பதுதான் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

எங்களுடைய மக்கள் ஏமாற்றப்படுவதற்கான சூழல் இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால்தான், இந்த விடயத்தில் சேர்ந்திருந்தால்தான் எங்களுக்கு எதிராக நடக்கின்ற இந்தச் சதி பின்னல்களுக்கு எதிராக நாங்கள் ஓர் அணியாக இந்த விடயத்தைக் கையாள முடியும்.

ஆகவே, இதனை முழுமையாக எதிர்க்க வேண்டிய தேவையில் நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம்.

இதனைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளவும், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சொன்னது போல, இது ஏற்கனவே பிரதேச சபையில் மட்டுமல்ல, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது கட்டப்படக்கூடாது என எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, இப்போது, திரும்பவும் அந்தக் குழு – இந்தக் குழு – போடுவது என்று சொல்லி ஜனாதிபதியால் ஏமாற்றப்படுகின்ற இந்த வித்தைகளுக்கு நாங்கள் ஒரு புரிதலை வைத்துக் கொண்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நாங்கள் எல்லோரும் அவதானித்து, கண்காணிப்போடு இருக்கின்ற பொழுதுதான் எங்கள் மக்களுடைய நிலத்தை நாங்கள் சரியான முறையில் காப்பாற்ற முடியும்.

இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகவும் நாங்கள் சரியான முறையில் செயல்படத் தவறினால் இன்னும் இன்னும் இந்த நடவடிக்கைகள் தொடரும். ஆகவே, அதற்காக எல்லோரும் ஒன்றிணைவோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார். (01)

You May Also Like

About the Author: digital

Leave a Reply