கம்பளையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று காலை சிலரால் தாக்கப்பட்டு கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பி நேற்று இரவு கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தம்மை வானில் ஏற்றி கொழும்பு, குடாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், இனந்தெரியாத நபர்கள் தன்னிடம் வாள்வெட்டு தொடர்பாக பலமுறை கேட்டதாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் தனது பணிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், பொலிஸாரால் கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானில் வந்து அவரை கடத்திச் சென்ற குழுவில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று காலை மாவெலயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வான் ஒன்றில் வந்த சிலர் வழி மறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் ஏறிய நான்கு பேர், பேருந்தில் பயணித்த கம்பளை இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போவின் பஸ் சாரதியான 46 வயதான ஹேமந்த ராஜபக்ஷவை தாக்கி, தாங்கள் வந்த வானுக்குள் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.