ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 5 ஆயிரம் பேர் பலி

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பிரேசிலில் ஒரே மாதத்தில் 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதனால் பிரேசில் கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் கவலைக் கொள்கின்றன. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,36,507 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,17,813 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,53,321 ஆனது. இந்த கொரோனா நோயால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் பிரேசில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறும் நிலையில் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72, 899 ஆக உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 5,063 ஆக உள்ளது. இங்கு நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 32,544 ஆக உள்ளது.

தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 35,292 ஆக உள்ளது. இவர்களில் 8 ஆயிரம் பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு மாத இடைவெளியில் 5 ஆயிரம் பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை. அது போல் வைரஸ் யாருக்கு பரவியிருக்கிறது என்பதை கண்டறிய போதிய பரிசோதனை கருவிகளும் இல்லாத நிலை உள்ளது.

இதனால் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் சிலர் சிகிச்சை பெறாமலேயே இறந்துவிட்ட துயர சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் இந்த நோயின் தீவிரத்தை அறியாத அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ இது ஒரு சிறிய காய்ச்சல்தான் என்று கூறியுள்ளார். இதனால் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
நோயின் தன்மையை உணர்ந்து மக்கள் சமூக விலகலை கடைப்பிடியுங்கள் என கூறிய அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரை பதவியிலிருந்து கடந்த 18ஆம் தேதி நீக்கினார் அதிபர். அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினருக்கும் கொரோனா வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. லாக்டவுனை அமல்படுத்தாத அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அவதிப்பட்டு வரும் நிலையில் பிரேசில் அதிபரும் அதே தவறை செய்கிறார். இப்படியே போனால் பிரேசிலும் ஐரோப்பிய நாடுகளை போல் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir