பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பத்தை மலேசியா ஆதரிக்கும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார் தெரிவித்தார்.
இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு முழுமையான ஆதரவை உறுதியளித்த மலேசிய அமைச்சர், “இலங்கை எங்கள் பிராந்தியத்திற்கு சொந்தமானது” எனவும் தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் போன்ற பிராந்திய குழுக்களின் ஒத்துழைப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தும் இருதரப்பு உறவுகள் குறித்தும் பிரதமரும், வருகை தந்த அமைச்சரும் விவாதித்தனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது அளித்த ஆதரவுக்காக மலேசிய அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையின் 6வது முதலீட்டு பங்காளியாக மலேசியா இருந்ததாகவும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.