முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தை இலங்கையில் நிறுவுவதற்கான திட்டத்தை நேற்றைய தினம் அறிவித்தார்.
பிங்கிரிய மற்றும் இரணைவில பிரதேசங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமுனுகம, தற்காலிகமாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள துறைமுக நகரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து மேலும் விளக்கமளித்தார்.
மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் துறைமுக நகரம் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் ஏற்கனவே 80 சதவீத கட்டுமானப் பணிகளை முடித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் , சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், கூடுதலாக 1.6 பில்லியன் டொலர் முதலீடுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அவர் வணிக நோக்கங்களுக்காக 74 மனைகள் மற்றும் 44 தொடர்மாடி குடியிருப்புகள் உட்பட 28 திட்ட நில அடுக்குகளை முதலீட்டாளர்களுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜப்பான்-இலங்கை வர்த்தக சபை மற்றும் இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்க ஆர்வமுள்ள ஜப்பானிய தொழில்முனைவோரின் ஆதரவுடன் பிங்கிரிய மற்றும் இரணைவில பிரதேசங்களில் ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.