வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பங்குகளை வாங்கலாம்!
இலங்கையிலுள்ள பொது நிறுவனங்களை மறுசீரமைக்கும்போது அந்நிறுவனங்கள் வெளிநாட்டு சக்திகளின் கைகளுக்குள் செல்வதை தடுக்கும் நோக்கில், அவற்றை இலங்கையர்களே கொள்வனவு செய்வதற்கு ஏதுவான மக்கள் நிறுவனமொன்றை நிறுவுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (27) பிற்பகல் 3. மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ‘Treasure Republic Guardians’என்று பெயரிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, விஜயதாச ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் மற்றும் 30 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உட்பட டீஎஸ்ஐ குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குலதுங்க ராஜபக்ஷ, பெலவத்தை பால் மா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆரியசீல விக்கிரமநாயக்க, நேச்சர் சீக்ரெட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமந்த குமாரசிங்ஹ, அரலிய அரிசி உற்பத்தி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டட்லி சிரிசேன போன்ற வர்த்தகத்துறை தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இவ்வைபவம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ஜனக விஜயபத்திரத்ன தெரிவிக்கையில், இந்த நிறுவனங்களின் ஒரு பங்கின் விலை ஒரு ரூபாய் எனவும், இலங்கை மக்கள் தமக்கு தேவையான அளவிற்கு இவற்றின் பங்குகளை கொள்வனவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களும் இவ்வாறு பங்குகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். (ரெ-18)