போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளருக்கும், குறித்த மோசடிச் செயலில் ஈடுபட்ட அரச உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பிரேரணை மூலம் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில், உரிய நடைமுறையை மீறி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் ஒரு தொகுதி பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, போதைப்பொருளை இறக்குமதி செய்யும் போது சுங்க அனுமதிக்காக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டதாகவும் அது பின்னர் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 22 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய திகதிகளில் முறையே கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிலைமை வெளிச்சத்திற்கு வந்ததாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.
இதற்கிடையில், பொது கணக்குகள் குழுவால் நியமிக்கப்பட்ட துணைக்குழு, சுகாதார அமைச்சின் தகவல் மேலாண்மை அமைப்பு குறித்து முறையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.