பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். தற்கால சூழ்நிலையில் வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் தமது பொழுதினைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு படை எடுத்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கடற்கரைப் பகுதிகள் சர்வதேச அரங்கில் தனக்கென தனியோர் இடத்தினைப் பெற்றிருக்கின்றன.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பே கடற்கரைப் பிரதேசதம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் தினமும் இப்பிரதேசத்திற்கு ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.
அசாதாரண சூழ்நிலை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த இப்பிரதேச சுற்றுலாத்துறை தற்போது மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதார விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இப்பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் தங்கியிருந்து இப்பிரதேசத்தின் அழகினை இரசிப்பதனால் இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிலையங்கள் பல்வேறானவை அமையப் பெற்றுள்ளன. இதனால் பெருந்தொகை அந்நியச் செலாவணி நாட்டுக்கு வருமானமாய் கிட்டி வருகின்றன.
இங்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர்.
இக்கடற்கரைப் பிரதேசதம் உலகரங்கில் மிகப் பிரபல்யம் பெறுவதற்கு சர்வதேச அளவில் இக்கடற்பரப்பில் நீரலைச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் இப்பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச ரீதியிலான நீரலைச் சறுக்கு விளையாட்டு இக்கடற்பரப்பில் வருடந்தோறும் இடம்பெறுவதனால் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு போட்டியாளர்களும் அவர்களோடு இணைந்ததாக பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இப்பிராந்தியத்திற்கு வருகை தருவது இலங்கை நாட்டுக்கு அந்நியச் செலாவணியினை பெருமளவில் ஈட்டிக் கொள்வதற்கு வழிகோலியாகவும் அமைகின்றது.
(எம்.ஏ.றமீஸ்)