இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் அண்மைய அநாகரீகமான நடத்தை காரணமாக அவர்களது பாராளுமன்ற சேவைகள் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது, சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா சபைக்கு வெளியே தன்னை தாக்கியதாக டயானா கமகே குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
அமர்வு மீண்டும் ஆரம்பமானதும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை சந்தித்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , டயானா கமகே எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை அநாகரீகமான வார்த்தைப் பிரயோகம் செய்தமை மற்றும் கட்டுக்கடங்காத வகையில் நடந்துகொண்டமை தொடர்பில் தெரிவித்தார்.
தனது செயற்பாடுகளை பாதுகாத்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா, டயானா கமகே தனது சக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை நேரில் பார்த்ததாகவும், அவர் தலையிட முற்பட்ட போது, இராஜாங்க அமைச்சர் அவரை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பெரேரா பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்ததையடுத்து, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை, பாராளுமன்ற உறுப்பினர் பெரேரா தனது கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்துள்ளார். இது பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவலாகியது.