கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 139 கைதிகளில் 102 பேரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
மேலும் தப்பியோடிய 37 பேரை தேடும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் சலசலப்பு ஏற்பட்டது. இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் புனர்வாழ்விற்காக இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும், இந்த குழப்பத்தின் போது, சிலர் புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
முதல் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்தது. அதன்பிறகு, ஏனைய கைதிகளும் தப்பியோடிவிட்டனர். புனர்வாழ்வு மையத்தில் மொத்தம் 484 கைதிகள் இருந்தனர். அவர்களில் தப்பியோடிய 139 கைதிகளை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் காலி போன்ற சொந்த ஊர்களின் அடிப்படையில் கைதிகள் குழுக்களாகப் பிரிந்துள்ளனர் என்று தெரிவித்த அவர், ஒவ்வொரு குழுவும் புனர்வாழ்வு மையத்திற்குள் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இருந்த போதிலும், கைதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக புனர்வாழ்வு நிலையத்தில் அவ்வப்போது மோதல்கள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.