நாட்டின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், 2024 ஜனவரி 1 ஆம் திகதி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான இறுதி முடிவு டிசம்பர் 27ஆம் திகதி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவினால் எடுக்கப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, வைத்திய நிபுணர்கள் உட்பட 1,700 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க வெளியேற்றத்தின் விளைவாக கிட்டத்தட்ட 20 சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 400 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ பிரிவுகள் வைத்தியர்கள் பற்றாக்குறையால் கடுமையான இடையூறு ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.