நாட்டைப் பீடித்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்காக யுக்திய என்ற சிறப்பு நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
விடுமுறை நாட்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களை விசேட கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியிருந்தமையினால் டிசம்பர் 24 முதல் 26 வரை கடந்த மூன்று நாட்களாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டிசம்பர் 25 வரை, யுக்திய நடவடிக்கையின் கீழ், மொத்தம் 13,666 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின்,ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.