தனது மனைவியை படுகொலை செய்த கணவருக்கு அநுராதபுர மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பினை நேற்றைய தினம் நீதிபதி மனோஜ் தல் கொடபிடிய வழங்கி உள்ளார்.
குறித்த வழக்குத் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அநுராதபுரம் தம்மன்னாவை பிரதேசத்தில் வசித்த தம்பதியொன்றுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையின் போது மனைவியை கடுமையாக தாக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ததாக கணவரான ஹேவகே நெரஞ்சன பெரேரா என்பவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த நபர் தனது மனைவியான பூர்ணிமா சந்திரகுப்தாவை கடுமையாக தாக்கி காயப்படுத்திய பின்னர், மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்ததாக சட்டமா அதிபர் சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
வடமத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் குளியாப்பிட்டிய தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிடிய முன்னிலையில் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்திருந்தது.
நீதிபதி மனோஜ் குளியாப்பிட்டிய நீதிமன்றத்துக்கு இடமாற்றலாகிச் சென்றதன் காரணமாக சந்தேக நபருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்காக நீதிபதி மனோஜ் தல்கொடபிடிய, வடமத்திய மாகாண மேல்நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஹேவகே நெரஞ்சன பெரேராவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.