புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால், மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளதுடன் தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என நம்ப முடியாது என அதன் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஜரை ஏற்க யாரும் முன்வரவில்லை.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு இம்மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், அது நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் இன்று பரிசீலணைக்கு எடுத்துக்கொண்டபோதே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.