தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கருத்துத் தெரிவிக்கையில், முன்னதாக டீசலின் விலை லிட்டருக்கு 29 ரூபாய், பின்னர் உரிய விலைகள் மீண்டும் நேற்றையதினம் 5 ரூபவால் உயர்த்தப்பட்டது.எனவே பேருந்து கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டும்.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கட்டண அதிகரிப்பு தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரியின் தாக்கம் காரணமாக கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருட்களின் விலை அதிகரித்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் , லங்கா ஐ ஓ சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இதேவேளை, தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவை இன்று மாலை போக்குவரத்து அமைச்சின் வளாகத்தில் சந்தித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான கட்டண திருத்தம் பெப்ரவரி 15ம் திகதிக்கு முன் அமுலுக்கு வர வேண்டும் என்றும் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.