சனத் நிஷாந்தவின் விபத்து தொடர்பில் விசாரணையில் வெளியான தகவல்!

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேர்ந்த விபத்தின்போது அவர் பயணித்த வாகனத்தை வேறு எந்த வாகனமும் முந்திச் செல்லவில்லை என இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தனது கணவருக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு எழுத்துமூலம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து சனத் நிஷாந்த பயணித்த கார் மீது மோதிய கொள்கலன் வாகனத்தின் சாரதியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (12) சுமார் ஐந்து மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் கொள்கலன் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, விபத்தைத் தவிர்ப்பதற்காக வாகனத்தை இடது பக்கம் திருப்பிய போது பின்னால் வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று கொள்கலன் ட்ரக் வண்டியுடன் மோதியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனத்தின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பல பாதுகாப்பு கமெராக் காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தின் போது அதிவேக நெடுஞ்சாலையில் வெள்ளை நிற கார் ஒன்றே கொழும்பு நோக்கி பயணித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காரின் சாரதி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் சாதாரண வேகத்தில் தான் பயணித்ததாகவும், வேகமாகச் செல்லவில்லை என்றும் சாரதி தெரிவித்தார். மேலும் தாம் வாகனத்தை ஓட்டிச் சென்ற காலத்தில் வீதி விபத்து அல்லது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை விபத்து நடந்த போது கொள்கலன் வாகனத்திற்கு முன்னால் வெள்ளை நிற காரோ அல்லது வேறு எந்த காரோ வந்ததாக நினைவில்லை என்றும் அதன் சாரதி கூறியுள்ளார்.

இதன்போது நடத்தப்பட்ட விசாரணைகளின் பின் விபத்து நடந்த போது, அமைச்சர் பயணித்த காரை வேறொரு வாகனம் முந்திச் செல்லவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply