உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் மூத்த அதிகாரிகளுடனான பிரதிச் செயலாளரின் சந்திப்புகள் அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை பார்வையிட உள்ளளார்.
வர்மா தனது இலங்கை பயணத்திற்கு முன்னதாக, பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முழு அளவிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்குச் சென்றார்.
இவ்வாறான ஒவ்வொரு முக்கிய இந்தோ-பசிபிக் பங்காளிகளுடனும் அமெரிக்காவின் ஒத்துழைப்பை இந்த விஜயங்கள் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.