சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு சுமந்திரன் பெப்ரவரி 14 ஆம் திகதி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் அதில் உள்ளடக்கப்படாத காரணத்தினால் குறித்த சட்டமூலம், சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.