யாழ். தென்மராட்சியில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 2 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தைப் போக்குவரத்துக் கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிஸார் மறித்துள்ளனர். எனினும், குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது.
இதையடுத்து டிப்பர் வாகனத்தைத் துரத்திச் சென்ற பொலிஸார், சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதை மறித்துள்ளனர்.
இதன்போது டிப்பர் சாரதி மற்றும் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மூவரும் இணைந்து பொலிஸார் மீது இரும்புக் கம்பிகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது நகரப் பகுதியில் கடமை இருந்து பொலிஸார் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்திய மணல் கடத்தல்காரர்கள் இருவரைக் கைது செய்தனர்.
எனினும், டிப்பர் வாகனத்துக்கு முன்பாக வழிகாட்டியாக வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டுத் தப்பிச் சென்றார்.
இதையடுத்து மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் வாகனத்தையும், மோட்டார் சைக்கிளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்குப் பொலிஸார் எடுத்துச் சென்றனர்.
தப்பிச் சென்றவரைக் கைது செய்ய சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.